Friday, April 19, 2013



எப்படி இருப்பது?
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
பற்றுவதற்கு பொறி கூட போதும்
உள்ளேயே சுழன்று கொண்டு இரு
மூலத்துக்கு மூலம்
ஆதி மூலம்
அது
இன்னும் உள்ளே
உள்ளே விரிந்தால்
உள் எது புறம் எது?
உள்ளே குவிந்தால்
உள்ளே விரியும்.
விரிந்ததற்கு
உள்ளும் இல்லை
புறமும் இல்லை
கையை விரித்துப் பார்.
ககனம் திறக்கும்
காரணம் தேடினால் காரணம் பிறக்கும்
இருப்பது பொதுவில் இருக்கிறது.
எல்லாம் பொது
எல்லாவற்றுக்கும் பொது
இதுதான் உரிமை.
எல்லாம் எல்லோருக்கும் பொது.
எல்லாவற்றையும் பொதுவில் விட்டால்
விளக்கமும் தானே ஆகிறது.
பொதுவாக பார்.
யாருக்காகவும் இல்லை
பொதுவாக.
பொதுவானது மட்டும் நன்மை பயக்கும்.
பொதுவாக இருந்தால் எங்கிருந்து பிரச்னை வரும்?
பிரச்னை வந்தாலும் அது
பொதுவான பிரச்னை
பொதுவாக தீரும்.
உன்னிடமுள்ள ‘நானே’ உனதல்ல பொதுவானதுதான்.
சரிவர புரிந்தால் சலிப்பில்லை.
எதை சொல்லவும் தமிழால் முடியும்.
தமிழ் பொதுவான மொழி
தமிழ் பொதுவான வழி.
உள்ளும் புறமும் வேறு வேறு அல்ல
உள்ளே புறம்
உள்ளொன்றும் புறமொன்றும் இல்லை என்றால்
தோற்றமும் இல்லை.
தோற்றுவாய் இல்லை.
தோற்ற மயக்கம் நான்.
இப்போது
நான் இருக்க இடமில்லை.
எங்கே ஒளிவது நான்
ஒளிவதற்கு இடமில்லை.
எந்த நிலையில் மறைகிறேன்
என்பதை உறுதி செய்ய
நான் இல்லை.
ஓடி வந்து ஓயும் அலை.
கரும்பலகை எழுத்து காணும் வரை.
நினைப்பது நின்றால்
நிலைப்பது நிற்கும்.

உடலின் தேவையை கவனி
வழியறிந்து வந்தால் வரலாம்
வலியறிந்து வந்தால் வரலாம்
தமிழ் அறிந்தால்
தகவலை அறியலாம்
தகவு அறிந்தால்
தப்பித்துக் கொள்ளலாம்.
இரண்டு பேருக்கு மட்டும் தெரிந்தால்
ரகசியம்
மூன்று ஆனால் அம்பலம்.
உற்றறிய உற்றறிய ஒன்று தேயும்.
காரணம் அறிய காணாது போகும்.
காரணம்
காரணத்தில் கரைந்து போகும்.
ஆசைக் காரணம்.
ஆசை x காரணம்.
ஆசையும் வேண்டாம் அசையவும் வேண்டாம்
ஆசையே அசை.
அசைந்தால் அலை எழும்.
அசைந்தால் அறியலாம்
அசைவு அற்றால் அறிவதும் இல்லை.
அறிவு அதும் இல்லை.
எதையும் பற்றாமல் வெளியில் வா.
‘உள்’ ளே இல்லை
எல்லாம் வெளிதான்.
ஆராய ஆராய ஆறுதல் ஆகும்.







No comments:

Post a Comment