1
ஆன்மீகம் என்பது இதுவரை கலைத்தன்மையாகவே (art)வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. உவமைகள், உப கதைகள் மூலமும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே உலகில் நிறைய வித்தியாசமான ஆன்மீக தத்துவங்கள் உருவாகிவிட்டன ! அந்த தத்துவங்களை தழுவி ஏகப்பட்ட மத நிறுவனங்களும் உருவாக்கி விட்டது. இந்த, மத தத்துவங்களை சரிவர புரிந்தோ, புரியாமலோ அதன் சடங்குகளை கடைப்பிடித்து அந்த மதத்திற்குரிய கடவுளர்களை வழிபட்டு மற்ற தத்துவங்களை ஏளனப்படுத்தி, மற்ற கடவுளர்களை பழித்து ஒருவித கலவர நிலையாகவே மனித சமூகம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது . உண்மை பலவிதமாக இருக்க முடியாது. உண்மை அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கமுடியும். அனைத்து தத்துவங்களையும் சொன்ன ஞானிகள் ஒரே உண்மையைத்தான் தரிசித்து இருக்க முடியும். ஒவ்வொருவர் ஒவ்வொரு உண்மையை தரிசித்து இருக்க முடியாது. பின் ஏன்? இத்தனை வித்தியாசமான தத்துவங்கள், இத்தனை வித மார்க்கங்கள்? உண்மை என்பதின் பொருள் என்ன ?அதன் லட்சணம் என்ன? எப்போதும் எங்கேயும் ஒரே மாதிரி மாறாமல் இருப்பதே உண்மை, இதுவே உண்மையின் லட்சணம். உண்மை இவ்வாறாக இருக்க தத்துவங்களில் இத்தனை வேறுபாடுகள் ஏன்? எல்லா மகான்களும், எல்லா ஞானியர்களும் கண்ட உண்மை ஒன்றுதான். அந்த உண்மையை எடுத்து சொல்வதில்தான் பிரச்னையே! அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தான் பிரச்னையே! அந்த நிலைபேறான உண்மையோ, மொழிகளை கடந்தது. காட்சிகளை கடந்தது, உணர்வுகளை கடந்தது. அந்த உண்மை அறிவின் முதிர்ச்சி அல்ல!அது அறிவைக் கடந்து நிற்பது . அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை ( அவரவர் சுபாவத்திற்கேற்றவாறு ) கையாண்டுள்ளனர். சிலர் மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டி உவமை, கற்பனைகளையும் கலந்து விட்டனர். சிலர் தங்கள் அனுமானங்களையும் சேர்த்துக்கொண்டனர். அந்த நிலைபேறான உண்மை ஓர் அனுபவ நிலை அல்ல! அது அநுபூதி நிலை. அனுபவம் என்பது ஒருவனது புலன்களால் அறியப்படுவது. அநுபூதி நிலையோ புலன்களை கடந்து, மனதையும் கடந்து, உணர்வையும் கடந்து நிற்பது. அனுபவம் கடந்த ஒன்றை அனுபவ மொழிகளால் சொல்லவரும்போது ஏற்படுகின்ற பிரச்னையே இத்தனை தத்துவ வேறுபாடுகள். மதங்களை, மார்க்கங்களை உபதேசித்தவர்கள் அவரவர் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வளவு அறிவு வளர்ச்சி அடைந்திருந்தனரோ அந்த அளவுக்கே உபதேசிக்க முடிந்தது. ஒரு மதம் 2௦௦௦ ஆண்டுக்கு முன் தோன்றியது என்ற பெருமையோடு,அந்த அளவுக்கு அறியாமையான மக்கள் இடையே, அவர்கள் அறியாமைக்கு ஏற்றஅளவுக்கு அது போதிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு மாறாத உண்மையை அறிவியல் ரீதியாக மட்டுமே நிலை நிறுத்த முடியும். உதாரனத்திற்கு, கணிதம் என்பது அறிவியல் ரீதியானது .இயற்பியல் என்பது அறிவியல் ரீதியானது . வேதியல் என்பது அறிவியல் ரீதியானது இதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. அதுபோல ஆன்மீக இயலும் அறிவியல் பூர்வமாக விவரிக்கப்பட்டால் வெவ்வேறு குழப்பங்கள் நிகழாது அனைவருக்கும் உண்டான ஒரே உண்மையை நிலை நாட்ட முடியும். அதற்கான முயற்சியை நாம் அனைவரும் மேற்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment