Friday, December 11, 2009

ஒன்று :யோக, தியான தொழில் நுட்பம் .

விபாசனா தியானம்.
புத்தர் பெருமான் அருளிச் செய்தது.

நான்கு வகையான விழிப்புணர்வுகள்.

1, காயாநுபாஸனா
உடலில் தோன்றும் நிகழ்வுகளை கவனித்தல் வேண்டும். மன விழிப்புடன் அறியாமையை நீக்கி மன மகிழ்வுடன் இருந்து கவனிக்க வேண்டும்.

2, வேதனானுபாஸனா
உடல்- மனம் இவைகளில் தோன்றும் உணர்ச்சி, உணர்வுகளை மன விழிப்புடன் இருந்து கவனிக்க வேண்டும்.

3,சித்தானுபாஸனா
மனதில் தோன்றும் எழுச்சிகளை மன விழிப்புடன் கவனித்தல் வேண்டும்.

4,தம்மானுபாஸனா
உடல், மனம், புறம், அகம் இவைகளிஸ் தோன்றும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்புடன் கவனிக்க வேண்டும் இது ஆழ்ந்த கோட்பாடுகளை சிந்திப்பதாகும் .

1-1,
1, மூச்சின் போக்குவரத்தை விழிப்புடன் கவனிப்பது. (சுவாசத்தின் உள்- வெளி மூச்சை கவனிப்பது).

2, சாதகர் ஓர் அமைதியான வனத்திற்க்கோ அல்லது ஒரு மரத்தின் அடிக்கோ ,
அல்லது தனிமையான ஒர் அமைதி சூழ்ந்த இடத்திற்கோ சென்று
பத்மாசனத்தில் அமர்ந்து
உடலை வளைக்காது நேராக நிமிர்த்தி
மூச்சின் போக்குவரத்தை தயானிக்கிறார்.

3, விழிப்புடன் இருந்து வெளி மூச்சு செல்லும் பொழுது- வெளிமூச்சு -என்பதை உணர்கிறார்.
உள்மூச்சை வாங்கும் பொழுது -உள்மூச்சு- என்பதை உணர்கின்றார்.
உள்மூச்சு நீண்டதாக இருப்பின்
உள்மூச்சு நீண்டது என்பதை உணர்கின்றார்.
வெளிமூச்சு நீண்டதாக இருப்பின்
வெளிமூச்சு நீண்டது என்பதை உணர்கின்றார்.

4, உள்மூச்சு குறுகியதாக இருப்பின்
உள்மூச்சு குறுகியது என்று உணர்கின்றார்.
வெளிமூச்சு குறுகியதாக இருப்பின்
வெளிமூச்சு குறுகியது என்று உணர்கின்றார்.

5, உள்மூச்சு முழுவதையும் (தொடக்கத்திலிருந்து இறுதிவரை)உன்னிப்புடன் கவனிக்கிறார்.

6, வெளிமூச்சு முழுவதையும் (தொடக்கத்திலிருந்து இறுதிவரை)உன்னிப்புடன் கவனிக்கிறார்.

7, ஒரு தொழில்நுட்ப தொழிலாளர் (turner) எங்ஙனம்
தான் வேலை செய்யும் பொழுது நீண்ட சுற்றை சுற்றினால்
அதை உணர்கின்றாரோ
அதேபோன்று
குறுகிய சுற்றை சுற்றும் பொழுது அதை உணர்கின்றார்.
அதேபோன்று நீண்ட மூச்சையும் ,
குறுகிய மூச்சையும் ஒரு சாதகர் உன்னிப்புடன் கவனிக்கிறார்.

8, இங்ஙனம் உடலை அதாவது உடலில் நிகழுகின்ற சுவாசம் என்ற
உள்மூச்சு- வெளிமூச்சு - போக்குவரத்தை
விழிப்புணர்வுடன் கவனிக்கின்றார்.

9, அதே போன்று மூச்சு தோன்றுவது ,
ஒடுங்குவது இவை இரண்டையும்
உன்னிப்புடன் கவனிக்கிறார்.

10, அங்ஙனம் உன்னிப்புடன் கவனிப்பதால் (உடல்,மனம் இரண்டையும்)
அவருக்கு அதில் தோன்றும்
பேரறிவு போன்ற அனைத்தும்
ஒன்றன்பின் ஒன்றாக தெரிய வருகின்றன.

1-2, இரியபாதா என்ற உடல்நிலைகளை கவனிக்கவேண்டும்.
ஒரு சாதகர் நடக்கும் பொழுது

நடத்தல் செயலை முழுக்கவனத்துடன் செய்கின்றார்.

அதேப்போன்று

கிடத்தல்

நிற்றல்

இருத்தல்

ஆகிய உடல் அசைவுகளையும்

உடல் எப்பொழுதெல்லாம் செய்கின்றதோ (அப்போதெல்லாம்)

அதை உணர்கின்றார்.

1-3,சதுஸம்பஞான
சதுஸம்பஞான என்ற இந்நிலையில்

உடலில் ஏற்படும் ஒவ்வொரு அசைவுகளையும் உற்று நோக்குகின்றார்.

உடல் முன் புறம் அசைந்தால் அதை உணர்கின்றார்.

பின் புறம் அசைந்தால் அதையும் உணர்கின்றார்.

உடல் அங்கங்கள் அசைவது

அனைத்தையும் உணர்கின்றார்.


உடைகளை அணியும் பொழுது,

உணவு அருந்தும்பொழுது,

நீர் பருகும் பொழுது,

உணவை மேல்லுமபொழுது,

சுவையை உணரும்பொழுது,

இயற்கையின் அழைப்பை ஏற்கும் பொழுது,

நிற்றல்,

இருத்தல்,

கிடத்தல்,

நடத்தல் இவைகளுடன்

விழித்திருக்கும்பொழுது,

பேசும்பொழுது,

இறுதியாக அமைதியாக இருக்கும்பொழுது

எல்லா நிலைகளிலும்

உடலில் ஏற்ப்படும் உணர்வுகளை அசைவுகளை கவனிக்கின்றார்.

1-4,(படிகூலங் மானசீகார)
1, ஒரு சாதகர் உடலின் உள் உறுப்புகளையும் த்யாநிக்கிறார்.

(புத்தர் பெருமான், இங்கு உடல் உள் உறுப்புகளையும்ஒவ்வொன்றாக கவனித்து த்யாநிக்கும் முறையை கூறுகிறார். உடல் அசுத்தமானது என்பதை உணரவே அங்ஙனம் போதிக்கப்படுகிறது).

2, ஒரு சாதகர் தனது பாதத்திலிருந்து ஒவ்வொரு அங்கமாக மேல்நோக்கி தலை உச்சி வரையும்

அதே போன்று தலை உச்சியிலிருந்து கீழ் நோக்கி பாதங்கள் வரையிலும்,

தோலால் மூடப்பட்டிருக்கும் இந்த (அசுத்தமான) உடலை த்யாநிக்கின்றனர்.

3,இவ்வுடலில் தலை முடி ,உடல் முழுவதிலும் உள்ள முடிகள்,

நகம், பற்கள். தோல் , தசைகள் , எலும்புகள் , மஜ்ஜைகள் , சிறுநீரகங்கள் , இதயம் , ஈரல் , சுரபிகள் , வயிறு , குடல்கள் ஜீரண உறுப்புகள் , கொழுப்பு , வியர்வை , உமிழ்நீர் , கண்ணீர், ரத்தம் , சிறுநீர் , மலம் போன்ற

எண்ணத்ற்ற தூய்மையில்லா உடல் உறுப்புகளும்

அவைகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் உள்ளன .

இவை அனைத்தையும் அவர் உணருகின்றனர்

4,இருப்பக்கமும் வாய்களை கொண்ட ஒரு (சாக்கு ) பையில் பலவித தானியங்களால் ஆன

அரிசி , நெல் , கம்பு , கொள்ளு , சோளம் என நிரப்பப்பட்டிருக்க

அதை திறக்கும் பொழுது ஒருவர் எவ்வாறு பிரித்துப்பார்கின்றாரோ

அதே போன்று ஒரு சாதகர் இவ்வுடலில் உள்ள தூய்மை கேடான ( அதாவது தலையில் இருந்து பாதம் வரைக்கும் , பாதத்தில் இருந்து தலை வரைக்கும் )

உடல் உறுப்புகளை

( ஒவ்வொன்றாக உணர்ந்து பார்த்து ) அவை நிலையற்றன ;

போற்றுதற்கு உரியனதல்ல என்று உணர்கின்றார் .

1-5, தாது மானசீகரம்.
உடலில் உள்ள நான்கு பூதங்களை தியானித்தல்.

இவ்வுடல் நான்கு பூதங்களான மண், நீர்.நெருப்பு காற்று இவைகளிலான கூட்டுப் பொருள் என்பதை
சாதகர் ஒருவர் தியானிக்கின்றார்.

கசாப்பு கடைக்காரர் அல்லது அவரது உதவியாளர்
ஒர் எருதை அடித்து அந்த எருதின் அவயங்களை ஒவ்வொன்றாக கொய்து
எங்ஙனம் ( விற்பனைக்காக தெருவின் சந்திப்பில்) பிரித்து வைக்கின்றாரோ
அதேபோன்று சாதகர் இவ்வுடளில்லுள்ள நான்கு பூதங்களையும் பிரித்துணர்ந்து இவ்வுடலின் நிலையாமையை உணர்கின்றார் (அதாவது இவ்வுடல் நான்கு பூதங்களின் கூட்டு வடிவமே என்று)

1-6, நவசீவதிகாபப்ப
இவ்வுடல் நிலையற்றது என்பதை மேலும் உணர ஒரு சாதகர்,

1, சுடு காட்டில் வீசப்பட்டு இறந்து ஒரு நாள் அல்லது இரண்டு, மூன்று நாட்கள் கழிந்த

உப்பியுள்ளதும், நீல நிறமடைந்து புழுக்கள் மொய்ப்பதுமான உடலை

அவதானிக்கின்றார்.


இதை உவமையாகக்கொண்டு தன்னுடைய உடலும்

ஒரு நாள் இதே போன்ற நிலைக்கு தள்ளப்படும் என்றும்

அந்நிலையிலிருந்து அதை தப்புவிக்க முடியாது என்பதையும் உணர்கின்றார்.

(கீழ்க்கண்ட ஒன்பது வித நிலையையடையும் சவங்களையும் தனது உடலுடன் ஒப்பிட்டு பார்க்கின்றார்)


(இந்த சூத்திரத்தில் புத்தர் பெருமான் ஒன்பது விதமான நிலைகளை படம்

பிடித்து காட்டுகின்றார்)

ஒப்பியுள்ள , நீல நிறமுடைய சவம் .


2,கழுகு , காக்க , வல்லூறு, நாய் , நரி, புழுக்கள் இவைகளால் சிதைக்கப்பட்ட சவம்


3,நீர் சுண்டி ( கருவாடு போன்று ) காய்ந்த சவம் .


4,எலும்புகளில் தசைகள் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் சவம் .

5,எழும்பும் நிண நீரும் தோய்ந்துள்ள சவம் .

6,எலும்புகள் பிடிப்பை இழந்து தளர்ந்து போயிருக்கும் சவம் .

7,வெண்ணிற எலும்புகள் ( தசைகள் நீங்கிய எலும்புக்கூடு )

8,ஒருவருடம் கடந்து குவித்து வைக்கப்பட்ட எலும்புக்குவியல் .

9,இறுதியாக அனைத்து எலும்புகளும் நொறுங்கி சாம்பல் குவியல் போல் தோன்றும் ஒரு சிறு மேடு

மேற்க்கூரியவாறு இவ்வுடல் சிதையுரும் போக்கை கவனித்து தனது உடலையும் , இந்த நிலைகளில் இருந்து தப்புவிக்க முடியாது என்பதை சாதகர் அறிந்து உடலின் நிலையாமையை அனுபவித்து உணர்ந்து கொள்கின்றார் .

(மேற்கூறிய பதினாறு சூத்திரங்களிலும் அவைகளின் உட்பிரிவுகளிலும் புத்தர் பெருமான் இவ்வுடலையே த்யான பொருளாக பயன்படுத்தும் விதத்தை போதித்துள்ளார் . இதற்க்கு பாலி மொழியில் காயாநுபாஸனா என்று பெயர்)

வேதனானு பாஸநா
2-1,
(குறிப்பு: புத்தர் பெருமான் எங்ஙனம் உடலையும் அதில் தோன்றும் மாற்றங்களையும் த்யானிக்க சொன்னாரோ அதேப்போன்று மனதில் தோன்றும் மாற்றங்களையும் த்யானிக்க சொல்லி உள்ளார். இதற்கு பாலி மொழியில் வேதனானு பாஸநாஎன்று பெயர்).

1, ஒரு சாதகர் மகிழ்ச்சியுடன் இருக்கும்பொழுது - நான் மகிழ்வுடன் இருப்பதை உணர்கிறேன்- என்பதை தெரிந்து கொள்கிறார்.

2, ஒரு சாதகர் துன்பமாக இருக்கும்பொழுது - நான் துன்பமாக இருப்பதை உணர்கிறேன்- என்பதை தெரிந்து கொள்கிறார்.

3, ஒரு சாதகர் சம நிலையில் இருக்கும் பொழுது (இன்பமும், துன்பமும் அற்ற) -நான் சம நிலையில் இருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்கிறார்.

4, ஒரு சாதகர் உலக பொருள்களால் ஏற்படும் மகிழ்ச்சியை உணர்ந்தால் - நான் உலக பொருள்களால் ஏற்பட்ட மகிழ்ச்சியை உணர்கிறேன் _ என்பதை தெரிந்து கொள்கிறார்.

5, ஒரு சாதகர் உலக பொருள்களால் ஏற்படும் துன்பத்தை உணர்ந்தால் - நான் உலக பொருள்களால் ஏற்பட்ட துன்பத்தை உணர்கிறேன் _ என்பதை தெரிந்து கொள்கிறார்.

6, ( இதேபோன்று) உலக பொருள்களால் ஏற்படும் சம மன நிலையை உணர்ந்தால்- நான் உலக பொருள்களால் ஏற்படும் சம மன நிலையை உணர்கிறேன் - என்பதை தெரிந்து கொள்கிறார்.

7, உலக பொருள்களால் அல்லாத மகிழ்ச்சியை உணர்ந்தால்- நான் உலக பொருள்களால் பொருள்களால் அல்லாத மகிழ்ச்சியை உணர்கிறேன்- என்பதை தெரிந்து கொள்கிறார்.

8, உலக பொருள்களால் அல்லாத துன்பத்தை உணர்ந்தால் - நான் உலக பொருள்களால் அல்லாத துன்பத்தை உணர்கிறேன் _ என்பதை தெரிந்து கொள்கிறார்.

9, உலக பொருள்களால் அல்லாத சம மன நிலையை உணர்ந்தால்- நான் உலக பொருள்களால் அல்லாத சம மன நிலையை உணர்கிறேன் _ என்பதை தெரிந்து கொள்கிறார்.


இவ்வாறு சாதகர் ஒருவர் மனதிற் கண் உள்முகமாகவோ, புற முகமாகவோ, அல்லது இரண்டிலுமோ ஏற்படும் மன உணர்வுகளை உன்னிப்புடன் (அவை தோன்றிய உடனேயே ) உற்று நோக்கி உணர்ந்து கொள்கின்றார்.

ஒவ்வொரு உணர்வு தோன்றுவதையும் உணர்கின்றார், மறைவதையும் உணர்கின்றார். தோன்றி தோன்றி ஒவ்வொரு கணமும் மறைவதையும் உணர்கின்றார்.

இங்ஙனம் பயிற்சி செய்யும் சாதகர் ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் மேற்கூறிய ( ஒன்பது வகையான மன நிலைகள்) மட்டுமே இவ்வுலகில் (மனதில்) உள்ளன என்பதை அறிந்து கொள்கிறார்.

3 சித்தானுபாஸனா
( குறிப்பு: மன உணர்வுகளை த்யானிக்க சொன்ன புத்தர் பெருமான் மனதின்( சித்தத்தின்) இயல்புகள் அல்லது குணங்களை த்யாநிப்பதற்கு சித்தானுபாஸனா என்ற முறையை அருளி செய்யதுள்ளார்).

3-1, ஒரு சாதகர் தனது மனம் காம வயப்பட்டிருந்தால் (ஆசை வயப்பட்டிருந்தால்) அதை உணர்கிறார்.

3-2, அங்ஙனம் காம வயப்ப்டாதிருந்தால் அதையும் உணர்கிறார்.

3-3, ஒரு சாதகர் தனது மனம் வெகுளி என்ற வெறுப்பு உணர்வால் பீடிக்கப்பட்டிருந்தால் அதை அறிந்து கொள்கின்றார்.

3-4, அங்ஙனம் வெகுளி வயப்படாமலிருந்தால் அதையும் உணர்கிறார்.

3-5, ஒரு சாதகர் மனம் மோகம் என்ற அறியாமையால் பீடிக்கப்பட்டிருந்தால் அதை முழுமையாக உணர்ந்து கொள்கின்றார்.

3-6, அங்ஙனம் அறியாமையால் பீடிக்க படாவிட்டால் அதையும் அறிகின்றார்.

3-7, ஒரு சாதகர் தான் சோம்பல் உணர்வுடன் இருந்தால் அதை உணர்கிறார்.

3-8, அங்ஙனம் இல்லையெனில் அதையும் அறிந்து கொள்ளுகின்றார்.

3-9, ஒரு சாதகரின் மனம் சலனமுடையதாக (உலழ்வுடன்) இருப்பினும் அதை அறிந்து கொள்கிறார்.

3-10, அங்ஙனம் இல்லையெனில் அதையும் அறிந்து கொள்ளுகின்றார்.

3-11, ஒரு சாதகரின் மனம் உயர் நிலையில் (உலக பொருள்களில் அல்லாது ) இருக்குமானால் அதையும் அவர் உணர்கிறார்.

3-12, அவ்வாறு இல்லையெனில் அதையும் அறிந்து கொள்ளுகின்றார்.

3-13, உலக பொருள்களில் அல்லாத உயர்வானதை தனது மனம் சிந்திக்குமானால் அதை அறிந்து கொள்கிறார்.

3-14, அவ்வாறு இல்லையெனில் அதையும் அறிந்து கொள்ளுகின்றார்.

3-15, தனது மனம் சலனமில்லாது ஒருமைப்பாட்டில் இருந்தால் அதை உணர்கிறார்.

3-16, அங்ஙனம் இல்லையெனில் அதையும் அறிந்து கொள்ளுகின்றார்.


இவ்வாறாக மனதின் நிலைகளை ஒவ்வொரு கணமும் அறிந்து கொள்கின்றார். மேற்கூறிய ஒவ்வொரு மன இயல்புகள் அல்லது குணங்கள் தோன்றுவதையும் மறைவதையு உணர்ந்து கொள்கின்றார்.

தம்மானுபாசனா
குறிப்பு: தம்மானுபாசனா என்ற பயிற்சியில் அகம்- புறம் அதாவது உடல்- மனம் இவை இரண்டிலும் இவைகளுக்கு அப்பால் வெளி உலகிலும் உள்ள நிகழ்வுகளான உணர்ச்சிகள், உணர்வுகள் , எழுச்சிகள், குண நிலைகள், இயல்புகள் இவை அனைத்தும் இயங்கிக்கொண்டே இருந்தாலும், மனதை,இவைகளுள் ஏதாவது ஓன்று மட்டுமே ஆட்கொள்ளும் என்று புத்தர் உறுதியிட்டு கூறுகிறார்.

மனம் விரைந்து ஒவ்வொரு உணர்ச்சி - உணர்வு- இயல்பு- குணம் இதுபோன்ற விஷயங்களை வெகு வேகமாக தொட்டு வருவதால், எல்லாவற்றையும் ஒருங்கே உணர்வதாக ஒரு மாய தோற்றத்தை செய்கிறது என்று கூறுகிறார்.

இதுவே -நான்,-என்,- எனது,- தான் என்ற மாய உணர்வை தோற்றுவிக்கின்றது.(உ -ம்) மனதில் ஏற்படும் வெகுளி என்ற கோபம், உடலில் ஏதாவது ஒர் இடத்தில் சிறு காயத்தால் ஏற்படும் வலி. இந்த இரண்டில் வெகுளி என்பது உணர்வு, உடலில் உள்ள வலி என்பது உணர்ச்சி. நமது மனம் வெகுளி வயபட்டிருப்பதையும், நமது உடலிலுள்ள வலியையும் ஒருங்கே ஒருவரால் அறிந்து கொள்ள முடியாது என்பது புத்த பெருமானின் முடிவு.

மானிட மனம், வெகுளி- வலி இந்த இரண்டையும் வெகு வேகமாக மாறி, மாறி உணர்ந்து கொள்ளுவதால் இரண்டையும் (உணர்வு- உணர்ச்சி) ஒரே நேரத்தில் அறிந்து கொள்ள முடியும் என்று கருதுவது தவறான முடிவு என்று புத்தர் பெருமான் எச்சரிக்கின்றார்.

தம்மானுபாசனா(நீவரனா)
4-1, சாதகர் ஒருவர் தனக்கு ஏற்படும் ஐந்து விதமான தடைகள் பற்றி சிந்திக்கின்றார்.

4-2, புலன் தொடர்பான ஆசையில் வயப்பட்டிருந்தால் அதை அறிந்து கொள்கின்றார்.

4-3 அவ்வாறு இல்லையெனில் அதையும் அறிகின்றார்.

4-4, சாதகர் ஒருவர் புலன் தொடர்பான ஆசை எவ்வாறு தூண்டப்டாமலேயே வருகிறது என்று உணர்கின்றார்.

4-5, தூண்டப்பட்ட புலன் ஆசைகளை விட்டுவிடும் மன உணர்வு எங்ஙனம் வருகிறது என்று உணர்கின்றார்.

4-6, எதிர்காலத்தில் எழவிருக்கும் கை விடப்பட்ட புலன் உணர்வுகள் வர இருப்பதையும் சாதகர் உணர்கின்றார்.

4-7, (மேற்கூறியவாறு) சாதகர் ஒருவர் கோபம் என்ற உணர்வை அறிந்து கொள்கின்றார். (அதாவது மேற்கூறிய ஆறு நிலைகளில்)

4-8, சோம்பலை உணர்ந்து கொள்கின்றார்.

4-9, மனம் சலித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து கொள்கின்றார்.

4-10, குழப்பமும் திட மனதும் இல்லாத நிலையை உணர்ந்து கொள்கின்றார்.

குறிப்பு: புத்தர் பெருமான் இங்கு கூற வருவது என்னவெனில், சாதகர் ஒருவருக்கு தடை என்பது புலன்களால் வரும் ஆசை, கோபம், மன உழல்வு, குழப்பம், திடமற்றநிலை என எச்சரிக்கின்றார்.

தம்மானுபாசனா (பஞ்ச ஸ்கந்தம்)
குறிப்பு: மனம்- உடல் இவைகளை போதித்த புத்தர் பெருமான் மனிதன் என்ற இந்த கூறு மனம்+ உடல் இவைகளின் கூட்டு பொருளே என விளக்க முற்படுகிறார்.

5-1, சாதகர் ஒருவர் சிந்திக்கின்றார்: இது பருத் தன்மை கொண்ட ரூபம்(பொருள்). இப் பருத் தன்மை கொண்ட பொருள் (தன்னிடத்தே) தோன்றுவதையும் அழிவதையும் அறிகின்றார்.

( விளக்கம்: உடலில் தோன்றும் இருத்தல், கிடத்தல், நிற்றல், நடத்தல், என்ற அசைவுகள் அனைத்துமே பருத் தன்மை கொண்டன. அதாவது நான்கு பூதங்களான காற்று, நெருப்பு, நீர், மண் இவைகளின் இயக்கமே.)

5-2, அதே போன்று வேதனை என்ற உணர்ச்சி (sensation) அல்லது உணர்வு ( feeling) இவை எழுவதையும் மறைவதையும் உணர்கின்றார்.

5-3, அதே போன்று சஞ்ஞா என்ற (புலனும் புற பொருள்களும் சந்திப்பதால் ஏற்படும்) புலனுகர்ச்சி தோன்றுவதையும் அழிவதையும் உணர்கின்றார்.

5-4, அதே போன்று மன எழுச்சியான ஸங்காரம் தோன்றுவதையும் , எழுவதையும் உணர்கின்றார்.

5-5, இறுதியாக விஞ்ஞானம் என்ற தன் முனைப்பு ( consciousness) தோன்றுவதையும் மறைவதையும் சாதகர் உணர்கிறார்.

5-6, இங்ஙனம் சாதகர் ஒருவர் ரூபம், வேதனை, சஞ்ஞா, சங்காரம், விஞ்ஞானம் என்ற ஐந்து கூட்டு பொருள்கள் தான் -நான்- அல்லது- தான்- என்ற மாய தோற்றத்தை உண்டு செய்து அதன் பொருட்டு பிறத்தல், பிணி, முதுமை, சாக்காடு என்பவைகள் தொடர்கின்றன என்பதை உணர்கின்றார்.

(விளக்கம்: ரூபம் என்பது நான்கு பூதங்களான ஐந்து புலன்கள் . அதாவது மெய்,வாய், கண், மூக்கு, செவி என்பன.)

வேதனை என்பது மேற்கூறிய புலன்களின் உதவி கொண்டு புறத்திலிருக்கும் பூதங்களான காற்று, நீர், நெருப்பு, மண் அவைகளை அறிதல்.

சஞ்ஞா என்பது புலன்களும் புற பொருள்களும் சேர்வதால் ஏற்படும் நுகர்ச்சி (உ-ம்) மாம்பழம் புற பொருள், கண், நாக்கு, மூக்கு, செவி, மெய், என்ற புலன்களுடன் சேரும் பொழுது நுகர்ச்சி (சஞ்ஞா) முழுமை பெறுகிறது.

செவி:: மாம்பழம் என்கிற ஓசையை கேட்கிறது.

கண்:: மாம்பழத்தின் உருவம் வண்ணம் இவற்றை கவனிக்கிறது.

மூக்கு:: மாங்கனியின் நறு மனத்தை உணர்கின்றது.

மெய்:: தொடு உணர்சியாகிய ( கைகளால்) மெய் கொண்டு மாம்பழத்தின் மிருது தன்மையை அறிகிறது.

நாக்கு:: மாம்பழத்தின் சுவையை உணர்கிறது.

சங்காரம் என்பது மேற்கூறிய புலன்களால் ஏற்பட்ட சஞ்ஞா என்ற நுகர்ச்சியால் (perception or consumption) ஏற்பட்ட மன எழுச்சி, அதாவது மாம்பழம் என்ற பொருளை நுகர்ந்தவுடன் இது சுவையானது, அல்லது சுவையாற்றது என்று உணர்ந்து, அதன் பொருட்டு எழும் மன எழுசிகளான வெறுப்பு, மகிழ்ச்சி, நினைவு, ஒப்பீடு, கற்பனை போன்றனவாம்.

விஞ்ஞானம் முன்னர் கூறிய ஐம்புலன்கள் (ரூபம்) வேதனா, சஞ்ஞா , சங்காரம், இவை அனைத்தையும் கொண்ட ஒர் உணர்வு விஞ்ஞானம் ( consciousness) ஆகும்.


ரூபம் என்ற ஐம்புலன்களுடன் ஏனைய வேதனா, சஞ்ஞா ,சங்காரம், விஞ்ஞானம் இவை அனைத்தையும் சேர்த்து -உயிர்பொருள் ( being) என்று கூறுகிறோம். பாலியில் அதை - சேதனம்- என்று கூறுவார்கள். இதுவே நான், என், தான், என்ற மாய தோற்றத்தை உற்பத்தி செய்கின்றது என்று புத்தர் கூறி -ஆத்மா- என்ற ஓன்று இல்லை என மறுக்கிறார்.

தம்மானுபாசனா (ஸலாயதனா)
( புலன்களுக்கான உள்ளும், புறமும் உள்ள அடித்தளங்கள். )

6-1, சாதகர் ஒருவர் கண்- பொருள்கள் இவைகளால் பார்த்தல் என்ற செயல் ( எழுச்சி) நடைபெறுகிற தென்று உணர்கின்றார். ( அதாவது கண்- புற பொருள் இரண்டையும் -பார்த்தல்- என்பது சார்ந்துள்ளது.)

6-2, தூண்டப்படாத மன எழுச்சிகள் எங்ஙனம் தோன்றுகின்றன என்பதை உணர்கின்றார்.

6-3, எவ்வாறு தடைகளை (எழுச்சிகளை) கைவிடுவது என்பதை உணர்கின்றார்.

6-4, எவ்வாறு தூண்டப்படாத எழுச்சிகள் எதிர் காலத்தில் தோன்றும் என்பதை உணர்கின்றார்.

( விளக்கம்: கண் புற பொருள்களுடன் ஓன்று படும் பொழுது காட்சி என்ற செயல் நடை பெறுகின்றது. இங்கு புத்தர் கூற முற்படுவது யாதெனில் கண்-புற பொருள் - காட்சி அல்லது காண்டல் இது மூன்றும் சேர்ந்தால் தான் -பார்த்தல்- என்ற செயல் நிறைவேற முடியும் என்கிறார்.)

6-5, இதே போன்று ( நான்கு நிலைகளிலும்) காது கேட்டல்

6-6, இதே போன்று, மெய், தோடு உணர்வு

6-7, இதே போன்று,நாக்கு, சுவை

6-8, இதே போன்று,மூக்கு, மணம்

தம்மானுபாசனா போஜ்ஜங்கா(வீடு பேற்றுக்கான கூறுகள். )
( விளக்கம்: புத்தர் பெருமான் இப்பகுதியில் மனதின் நுட்பமான நிலைகளை விளக்கி வீடு பேறான இறுதி நிலைக்கு நம்மை இட்டு செல்கின்றார். )

7-1, சாதகர், வீடு பேற்றுக்கான பயிற்சியில் முனையும் பொழுது அதற்க்கு சாதகமான - விழிப்புணர்வு- என்ற முனைப்பு தன்னிடத்தே இருப்பதை உணர்கின்றார்.

7-2, அங்ஙனம் விழிப்புணர்வு இல்லை எனில் அதையும் சாதகர் உணர்ந்து கொள்கின்றார்.

7-3, தன்னிடம் விழிப்புணர்வு இல்லை என்ற உணர்வு எழுவதையும் உணர்ந்து கொள்கின்றார்.

7-4,இறுதியாக, த்யானித்து வீடு பேறான நிப்பாணத்தை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு தோன்றுவதையும் உணர்கின்றார்.

7-5, வீடு பேற்றிற்கு சாதனமான உண்மையை ஆய்வு செய்தல் என்பதை முன்னர் கூறிய -ஒன்று முதல், மூன்று வரை உள்ள படி நிலை களில் அறிந்து கொள்கின்றார்.

7-6, வீடு பேற்றிற்கு சாதனமான -சக்தி- என்பதை மேற்கூறிய -ஒன்று முதல், மூன்று வரை உள்ள படி நிலை களில் அறிந்து கொள்கின்றார்.

7-7, ....இதே போன்று -மகிழ்ச்சி- இருப்பதை உணர்ந்து கொள்கின்றார்.

7-8, ....இதே போன்று -மன அமைதி

7-9, ....இதே போன்று -மன ஒருமை

7-10, ....இதே போன்று -சம நோக்கு

7-11, மேற்கூறிய வீடு பேற்றிற்கு சாதனங்களான விழிப்புணர்வு, உண்மையை ஆய்வு செய்தல், சக்தி, மகிழ்ச்சி, மன அமைதி, மன ஒருமை, சம நோக்கு இவைகள் அனைத்தையும் உலக பொருள்களின் (விஷயங்களில்) மீது யாதொரு பற்றும் இன்றி, சாதகர் ஒருவர் த்யானித்து வருகின்றார்.

தம்மானுபாசனா (அரிய சச்சங்) (நான்கு பேருண்மைகள்)
( விளக்கம்: மேற்கூறிய அனைத்து வகை களையும் த்யானித்த பின்னர் சாதகர் ஒருவர்- அரிய சச்சங்- என்ற நான்கு உண்மைகளை த்யானிக்க வேண்டும்).

8-1, சாதகர் ஒருவர் முழு உணர்வுடன் _இது துன்ப மயமானது --இது துன்பத்திற்கான காரணி --இது துன்பத்திற்கான முடிவு-- இது ( இவ்வழி) துன்பத்தை நீக்க இட்டு செல்கிறது- (இந்த நான்கு உண்மைகளையும் ) என உள்ளும், புறமுமாக த்யானித்து வருகின்றார்.

8-2, மேற்கூறிய தம்மங்கள் (நான்கு உண்மைகள்) மனதில் எழுவதையும், மறைவதையும், தோன்றி மறைவதையும் ( ஒவ்வொரு கணமும் சாதகர்) உணர்கின்றார்.

8-3, இப்போது சாதகர் மனத்தில் தம்மங்கள்( இந்த தம்மங்கள் ஒன்றே) ஞானத்தை பெறுவதற்காக உள்ளன என்பதையும் அவையே மன விழிப்பை ஏற்ப்படுத்துகின்றன என்பதனையும் அறிந்து உலகில் யாதொன்றிலும் பற்று இல்லாமல் தனித்து வாழ்கின்றார்.

8-4, ஆகையால் ஒவ்வொரு சாதகரும் மேற்கூறிய நான்கு முறைகளில் ( காயானு பாசன, வேத, சித்த, தம்மா, ) விழிப்புணர்வு பயிற்சியை ( mindfullness) செய்தால் ஏழு ஆண்டுகளில் அரஹந்த நிலையையோ, அல்லது பிறவி இல்லா (அனாகாமி) நிலையையோ, பெறுவர்( அவர்களிடத்து பற்று இருப்பினும்)

(விளக்கம்: இந்த பற்று என்பது உயிரின் மீதான பற்று மட்டுமே என அறிஞர்கள் கருது கின்றனர்.)

8-5, ( ஏழு ஆண்டுகள் தேவையில்லை) மேற்கூறிய த்யானபயிற்சியை ஆறு ஆண்டுகளுக்கு செய்யலாம்.

8-6, ஐந்து ஆண்டுகளுக்கு

8-7, நான்கு ஆண்டுகளுக்கு

8-8, மூன்று ஆண்டுகளுக்கு

8-9, இரண்டு ஆண்டுகளுக்கு

8-10, ஒரு ஆண்டுக்கு

8-11, ஏழு மாதங்கள்

8-12, ஆறு மாதங்கள்

8-13, ஐந்து மாதங்கள்

8-14, நான்கு மாதஙகள்

8-15, மூன்று மாதஙகள்

8-16, இரண்டு மாதஙகள்

8-17, ஒரு மாதம்

8-18, அரை மாதம்

8-19, ஒரு வாரம்

( விளக்கம்: சாதகர் ஒருவர் இவ்வாறு ) காயானுபாசனா, வேதனானுபாசன, சித்தானு பாசனா, தம்மானுபாசனா என்ற நான்கு முறைகளிலும் ( மன விழிப்பு என்ற இந்த விபாசனா ) ஏழு ஆண்டுகளிலிருந்து ஒரு வாரம் வரைக்கும் கூட பயிற்சி செய்து அரஹந்த நிலையையோ அல்லது பிறவி இல்லா நிலையையோ எய்தலாம் என்று புத்தர் பெருமான் உறுதி கூறுகிறார். ஏழு ஆண்டுகளோ, ஏழு நாட்களோ இது சாதகரின் தீவிர முயற்சியை பொறுத்தது.

முடிவு சூத்திரங்கள்
1, இவ்வாறு இதுவரை சொல்லப்பட்டது துன்பத்தை போக்கி மனத்தை தூய்மை படுத்தி , ஞானத்தை பெற்று அவை மூலம் வீடு பேற்றை அடைய ஒர் அரிய வழி ( மேற்கூறியவை) உண்டு என்று .

2, புத்தர் பெருமான் இங்ஙனம் அருளி செய்தார்.

3, அவருடைய சீடர்கள் யாவரும் மகிழ்வுற்றனர்.



விபாசனா த்யானம் - விளக்க உரை.
எந்த ஒரு பயிற்சிக்கும் ஆயத்தம் மிக அவசியமானது. உடல் பயிற்சியோ, மன பயிற்சியோ எதுவாயினும் ஆயத்தம் அவசியம். புத்தர் பெருமான் கூறிய த்யான பயிற்சியை செயல் படுத்துவதற்கு முன்னர் ஆயத்தமாக இருப்பது அவசியம். பயிற்சிக்கு உடல் தூய்மை, மன தூய்மை , நல்ல ஆரோக்கியம் , தூய்மையான இடம், நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். தனிமை, அமைதி இவை இரண்டும் மிக,மிக முக்யமானவை.

பௌத்த கோட்பாட்டின் படி இப்பிரபஞ்சம் இரண்டு பொருள்களின் கூட்டு வடிவு. முதலாவது _ரூபம்_ என்ற ஜட பொருட்கள் அல்லது காற்று, நீர், நெருப்பு, மண் என்ற நான்கு பூதங்கள். இந்த நான்கு பூதங்களால் ஆக்கப்பட்டது தான் நமது உடல். இரண்டாவது பொருள் மனம் என்பது. இது ஜட பொருள் அல்ல. இது _நாமம்_ என்று அழைக்கப்படுகிறது. இதுவும் நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது. வேதனை= உணர்வும்_ உணர்ச்சியும் . சஞ்ஞா = நுகர்வு, சங்காரம்= நினைவு, கற்பனை, போன்ற மன எழுச்சிகள். விஞ்ஞானம்= தன் உணர்வு, தன் அறிவு.

ஓர் உயிரில் மேற்கூறிய எட்டு கூட்டு பொருள்களும் உள்ளன. அதாவது ரூபம் என்ற பரு பொருளான காற்று, நீர், நெருப்பு, மண் இவைகளால் ஆன கண், செவி, மூக்கு, நாக்கு, மெய் என்ற பருவுடல் இதனுடன் வேதனை, சஞ்ஞா, சங்காரம், விஞ்ஞானம் என்ற தன் உணர்வு (தன் அறிவு) இந்த எட்டு பொருள்கள் இல்லாமல் உயிரினம் ( மனிதன்) என்ற ஒன்று இப்பிரபஞ்சத்தில் இருக்க முடியாது. ( முக்கிய குறிப்பு: இது பௌத்த சமய கோட்பாடு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நாமமும், ரூபமும் தனி, தனியே இயங்குமானால் அதை உயிர் பொருள் என்று கூற முடியாது. ஏனெனில் உயிரற்ற பல பொருட்களை நாம் காண்கிறோம். காற்று முதல் பாறை வரை பல பொருட்கள் உள்ளன. இவைகளை நாம் உயிர்போருட்கள் என்று கூறுவதில்லை.

எங்கு ரூபமும் (பருப்பொருள்) நாமமும் (மனமும்) இணைகிறதோ அதையே உயிர்பொருள் என்று கூறுகின்றோம். மாந்தர் நான்கு பூதங்களான காற்று, நீர், நெருப்பு, மண் இவைகளினால் ஆகிய ஐம்புலன்கள் மற்றும் உணர்வு, உணர்ச்சி, நுகர்ச்சி, மன எழுச்சி, தன் உணர்வு இவைகளின் மொத்த வடிவமே.

புத்தர் பெருமானால் சதி பட்டான சூத்திரத்தில் போதிக்க பட்டுள்ள விபாசன முறைகளை கொண்டு மேற்கூறிய எட்டு கூறு களையும் பிரித்துணர்ந்து, அவைகளின் செயல்களையும் இவ்வுடலில் அவற்றின் பங்கையும் ஆராய்ந்து, பார்க்க போகின்றோம். அங்ஙனம் தனி, தனியாக பிரித்து பார்க்கும் பொழுது _நான்- தான்- என்- எனது போன்ற உணர்வுகள் போலியானது என்பதை உணர்ந்து வீடு பேற்றை அடையமுடியும்.


பயிற்சி
ஏனைய நிலைகளான கிடத்தல், இருத்தல், நிற்றல் நிலைகளையும் அதாவது இது போன்ற அசைவுகளை உடல் எப்பொழுதெல்லாம் செய்கின்றதோ அவ்வப்பொழுது அந்நிலையை உடனடியாக கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் .

முக்கிய நான்கு அசைவுகளை கவனித்த பின்னர் உடல் செய்யும் ஒவ்வொரு சிறு அசைவுகளையும் கவனிக்க கூடிய திறன் ஏற்படும்.

உடல் முன் புறம் அசைந்தால் அதை உணர வேண்டும் பின் புறம் அசைந்தால் அதையும் உணர வேண்டும். உடல் அங்கங்கள் அசைவது அதாவது அவ்வப்பொழுது - கண்ணை சிமிட்டிக்கொண்டு இருப்பதையும்- கூட உங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இதேப்போன்று உடை அணியும் பொழுது, நீர் அருந்தும்பொழுது, உணவை மெல்லும் பொழுது, பேசும்பொழுது, விழித்திருக்கும் பொழுது, அமைதியாக இருக்கும் பொழுது- இந்த எல்லா நிலைகளிலும் உடலில் ஏற்படும் அசைவுகளை / உணர்வுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.


கவனத்தில் கொள்ள வேண்டுவது.
1, உடல் ஜட பொருள் .

2,அது நான்கு கூட்டு பொருள்களால் ஆனது .

3, உடலின் அசைவுகளும் இக்கூட்டு பொருள்களை சார்ந்தன .

4, உடல் உங்களிடமிருந்து வேறுபட்ட ஒன்று.

5, அது நிலையற்றது, அழிவுக்கு உட்படுவது.

மனம்.
மனம் என்பது காட்சி+ சப்தம்+ உணர்வு இவைகளால் ஆனது. மனதில் இவை மூன்று மட்டுமே இருப்பதை பயிற்சியில் உணர்வீர்கள்.
சித்தம் என்பது இயல்பு அல்லது குணம் இவைகளை குறிக்கும்.




முடிவுரை.
உடல், மனம் அவைகளில் தோன்றும் உணர்வுகள், உணர்ச்சிகள், எழுச்சிகள், குணங்கள் இவைதான் நான், எனது, தான், என் - என்ற மாய தோற்றத்தை செய்கின்றன.

விபாசனா பயிற்சி முறையை நீங்கள் செய்யும் பொழுது அனுபவ பூர்வமாக உடல்+மனம் என்ற தனித்தனியான விஷயங்கள் இருப்பதை உணர்வீர்கள்.




மனதில் கொள்ள வேண்டியது.
1, பரு பொருளான பிரபஞ்சம் அதாவது நான்கு பூதங்கள் உங்கள் உடலை தவிர்த்தும் இருக்கின்றன.

2, நான்கு பூதங்களால் ஆக்கப்பட்டது உடல் ( அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன.

3, ஐம்புலன்களால் ஏற்படும் உணர்ச்சி , அதன் பொருட்டு எழும் உணர்வு எழுச்சிகள், குணம் இவைகள் மனதை ஆட்கொள்கின்றன .

4, உடல் அல்லது புலன்கள் +உணர்ச்சி+ உணர்வு+ குணம்+ எழுச்சி இவைகளால் ஏற்படும் நான்- தான்- என்- எனது என்பன போலியான - தன் முனைப்பு- என்ற ஒன்றை தோற்று விக்கின்றது.



ஊழ்வினை
புத்தர் செயல் விளைவு கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார். கடந்த கால செயல்கள், தனி நபரின் தொடரும் பழம்வினைகள், இன்றைய தனி நபர் செயல்கள் மற்றும் சமூக செயல்கள் ஆகிய அனைத்தும் விளைவுகளை ஏற்படுத்தும். பக்தியால் பழைய வினைகளின் விளைவுகளை போக்க இயலாது. ஆனால் புதிய நற்செயல்களாலும், தவத்தாலும் அவற்றை போக்க/ மாற்ற முடியும். புத்தர் கடவுள், பிரபஞ்சத்தின் தோற்றம் முதலிய பல விஷயங்களை விளக்கவில்லை.



தத்தாகதர்
பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில்
சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு
ஒரு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர்,
ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார்.
ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின்
பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார்.
இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்')
என்று அறிவித்துக் கொண்டார்.


புத்த நிலை
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ,
கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை.
தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும்,
புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment