Friday, April 19, 2013



எப்படி இருப்பது?
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
பற்றுவதற்கு பொறி கூட போதும்
உள்ளேயே சுழன்று கொண்டு இரு
மூலத்துக்கு மூலம்
ஆதி மூலம்
அது
இன்னும் உள்ளே
உள்ளே விரிந்தால்
உள் எது புறம் எது?
உள்ளே குவிந்தால்
உள்ளே விரியும்.
விரிந்ததற்கு
உள்ளும் இல்லை
புறமும் இல்லை
கையை விரித்துப் பார்.
ககனம் திறக்கும்
காரணம் தேடினால் காரணம் பிறக்கும்
இருப்பது பொதுவில் இருக்கிறது.
எல்லாம் பொது
எல்லாவற்றுக்கும் பொது
இதுதான் உரிமை.
எல்லாம் எல்லோருக்கும் பொது.
எல்லாவற்றையும் பொதுவில் விட்டால்
விளக்கமும் தானே ஆகிறது.
பொதுவாக பார்.
யாருக்காகவும் இல்லை
பொதுவாக.
பொதுவானது மட்டும் நன்மை பயக்கும்.
பொதுவாக இருந்தால் எங்கிருந்து பிரச்னை வரும்?
பிரச்னை வந்தாலும் அது
பொதுவான பிரச்னை
பொதுவாக தீரும்.
உன்னிடமுள்ள ‘நானே’ உனதல்ல பொதுவானதுதான்.
சரிவர புரிந்தால் சலிப்பில்லை.
எதை சொல்லவும் தமிழால் முடியும்.
தமிழ் பொதுவான மொழி
தமிழ் பொதுவான வழி.
உள்ளும் புறமும் வேறு வேறு அல்ல
உள்ளே புறம்
உள்ளொன்றும் புறமொன்றும் இல்லை என்றால்
தோற்றமும் இல்லை.
தோற்றுவாய் இல்லை.
தோற்ற மயக்கம் நான்.
இப்போது
நான் இருக்க இடமில்லை.
எங்கே ஒளிவது நான்
ஒளிவதற்கு இடமில்லை.
எந்த நிலையில் மறைகிறேன்
என்பதை உறுதி செய்ய
நான் இல்லை.
ஓடி வந்து ஓயும் அலை.
கரும்பலகை எழுத்து காணும் வரை.
நினைப்பது நின்றால்
நிலைப்பது நிற்கும்.

உடலின் தேவையை கவனி
வழியறிந்து வந்தால் வரலாம்
வலியறிந்து வந்தால் வரலாம்
தமிழ் அறிந்தால்
தகவலை அறியலாம்
தகவு அறிந்தால்
தப்பித்துக் கொள்ளலாம்.
இரண்டு பேருக்கு மட்டும் தெரிந்தால்
ரகசியம்
மூன்று ஆனால் அம்பலம்.
உற்றறிய உற்றறிய ஒன்று தேயும்.
காரணம் அறிய காணாது போகும்.
காரணம்
காரணத்தில் கரைந்து போகும்.
ஆசைக் காரணம்.
ஆசை x காரணம்.
ஆசையும் வேண்டாம் அசையவும் வேண்டாம்
ஆசையே அசை.
அசைந்தால் அலை எழும்.
அசைந்தால் அறியலாம்
அசைவு அற்றால் அறிவதும் இல்லை.
அறிவு அதும் இல்லை.
எதையும் பற்றாமல் வெளியில் வா.
‘உள்’ ளே இல்லை
எல்லாம் வெளிதான்.
ஆராய ஆராய ஆறுதல் ஆகும்.












உண்மைக்கு அருகில்

வழி வழியாய்
இறங்கும்
மரபும்
மொழியும்
பிரபஞ்சமும்.
காரணம் திருகல்.
மரபணு திருகல்.
மொழியும் திருகல்.
பிரபஞ்சமும் திருகல்.
எல்லாமே ஒன்றிலிருந்து முளைத்தது
ஒன்றிலிருந்து ஒன்று முளைத்தது.
ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்தது.
ஒன்றிலிருந்து ஒன்று விரிய விரிய
ஒன்றிலிருந்து ஒன்று கிளைக்க கிளைக்க
அந்தந்த இடத்துக்கும் அந்தந்த அர்த்தம்.
எல்லாம் ஒரே அர்த்தம்.
பொருளும் திருகல்தான்.
இது சும்மா இருக்குமா?
பிறப்பதற்கு தான் காரணம் உண்டு.
இருப்பதற்கு காரணம் இல்லை.
இருந்துகொண்டே இருப்பதற்கு என்ன காரணம்.
அடியும் இல்லை
முடியும் இல்லை.
ஆராய வேண்டாம்
அப்படியே பார்.

ஒரே கேள்வி
எனக்குண்டான
என்
வாழ்க்கையை
நான்
வாழ்கிறேனா?

ஆசீர்வாதம்
உனக்கு எல்லா திசைகளிலுமிருந்து
ஆசீர்வாதம் குவிகிறது
அறிந்து
ஏற்றுக்கொள்.
‘நீங்கள் ஏற்கனவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’
இது ஏசு மொழி.

தோற்றம்
இன்னொன்றைப்போல
என்றால்
வெளிப்படவே வேண்டாம்.

அகங்காரம்
தலை முடி அகங்காரமானது.
முடியை நிர்வகிப்பவர்
தனது அகங்காரத்தை
நிர்வகிக்கிறார்.

ரத்தினங்கள்
ரத்தினங்கள்
விளையுமிடத்தில்
கேட்பாரற்று கிடக்கின்றன.

குப்பை
சேர்த்து
வைப்பதெல்லாம்
குப்பை. 

சேமிப்பு
வாழ்க்கையை செலவழிக்க வேண்டும்.
பொருளைத்தான் சேமிப்பார்கள்.
வாழ்க்கையை சேமித்தால்
கையகல
அளவுக்கு
குறுகி விடுகின்றது.



















இருப்புத்தன்மை

உங்களுடைய இருப்புத்தன்மையை உங்களுடைய மூளையில் நிறுத்தி வைத்திருந்தால்
அது எண்ணுகிறது,
அது ஒன்றைப்பற்றி சிந்திக்கிறது.
அது ஒன்றைப்பற்றி கருதுகிறது
அது முடிவெடுக்கிறது
அது மற்றவரிடம் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் கபடம் கற்று தருகிறது.
உங்கள் இருப்பை உங்களது முதுகுத்தண்டில் உள்ள ஒவ்வொரு சுரப்பியிலும் ( சக்கரா ) நிலை நிறுத்திப் பார்க்க
உங்கள் உணர்வில் இருக்கிற மாற்றங்களை
உணர முடிகிறது.
சுரப்பிகளில் சுரக்கும் அமிலம் ரத்தத்தில் கலக்காவிட்டால் உங்களுக்கு உணர்வே இருக்காது.
உங்கள் இருப்பை கண்களின் இரண்டு ஆதாரங்களிலும் நிறுத்தி
 (முக்கோணமாக )
 இரு ஆதாரங்களையும் மேல் நோக்கி
ஆக்னா சக்கரத்தில் நிலை நிறுத்த
அங்கிருந்து ஒளி கிளம்புகிறது.
அந்த ஒளியில் உங்கள் இருப்பை நிலையை  நிறுத்த
உங்கள் அறிவு விளக்கம் பெறுகிறது.
அந்த அறிவாகவே தொடர்ந்து உங்களை நிலை நிறுத்த முடிந்தால்
அறிவே பிரபஞ்சம் ஆகிறது.
‘அறிவால் ஆனது அண்டம்’ என மொழிய முடிகிறது.
அடுத்து பூரணம் என்கிற சொல்லில்
உங்கள் இருப்பு தன்மையை நிலை நிறுத்த முடிந்தால்
பூரணம் அடைகிறீர்கள்.
 பரிபூரணம் என்ற சொல்லில்
உங்கள் இருப்புத்தன்மையை நிலை நிறுத்த தெரிந்தால்
பரிபூரண நிலையில் நிற்கிறீர்கள்.
உங்கள் இருப்புத்தன்மையை
முழுமையாக உங்களால் எங்கே வைக்க முடியுமோ
அதுவே உங்கள் பிரபஞ்சம் ஆகும்.
ஒரு சொல்லில் உங்கள் இருப்பை பூரணமாக வைத்தால்
அந்த சொல்லே உங்கள் பிரபஞ்சமாக விரிகிறது.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
உங்களுடைய இருப்பு என்பது
உங்களுடைய கவனம் ஆகும்.
உங்களுடைய இருப்பு என்பது உங்களுடையது அல்ல!
இந்த பிரபஞ்சத்தினுடையது ஆகும்.
பிரபஞ்சம் உங்கள் வழியாக
இதையெல்லாம் நிகழ்த்திக் கொள்கிறது.