Sunday, January 17, 2010

பதினெட்டு : யோனி


தாவர யோனி வழியே வந்து ,
ஊர்வன,
நீந்துவன,
பறப்பன,
ஆகியவற்றின் யோனி வழியே வந்து,
தேவ யோனி வர்க்கங்களான
பூதர்,
இராட்சசர் ,
அசுரர்
முதலியோர் யோனி வழியே கடந்து வந்து
மனித யோனியில்
ஒருவனது சுக்கிலத்துளியின் கண் ஒரு பகுதியில்
பேரணு உருவில்
வெளிப்பட்டு -

எத்தனை யோனிக்குள் புகுந்து,
புகுந்து
வெளிப்பட்டு மனிதப்பிறவி என்பதே கறைப்படுத்தப்பட்ட
பிறவி ஆயிற்றே என்று
வருந்திய ஞான சித்தர் ராமலிங்க அடிகள்
'இறந்திறந்தே இளைத்ததெல்லாம் போதும் இந்த உடம்பு'
என்று கண்ணீர் சொரிய பாடுகின்றார்.

பதினேழு : நிர்வாணா.


விளக்கை அணைத்து விட்டால்

ஏற்படுவது போன்ற

ஒன்றுமற்ற

சூன்யமான

ஒரு நிலை தான் நிருவாணம்.

என்கிறது ஹீனயான தத்துவம்.

நிர்வாணம் என்பது சூன்யம் அல்ல .

நிலையற்ற

இந்த பிரபஞ்சம் அனைத்துக்கும்

மூலாதாரமாயுள்ள

ஒரு உயர்ந்த நிலை என்கிறது

மகாயான தத்துவம்.

Saturday, January 16, 2010

பதினாறு : திகம்பர மகாவீரர்.


மகா சித்தரான ஸ்ரீ வர்த்தமான மகாவீரர் திகம்பர நிலை அடைவதற்கு ஒரு தத்துவார்த்த நிகழ்வே உந்துதலாக இருந்தது.
அன்று மார்கழி மாதத்து கிருஷ்ண பட்ச தசமி திதி.
இந்திரன் கொடுத்த தெய்வீக ஆடை மட்டுமே உடுத்தி தவம் செய்து வந்த
வர்த்தமானரிடம் சோமதத்தன் எனும் பிராமணன் தேடி வந்தான். தானம் வேண்டும் என்று இறைஞ்சினான்.
மகாவீரரிடமோ இடுப்பிலிருந்த இந்திரன் உடையைத்தவிர வேறு இல்லை. ஆயினும் எதுவும் இல்லை என்று கூற விரும்பாது அந்த ஆடையின் ஒரு பகுதியை கிழித்து கொடுத்தார் அவர்.

அதனை பெற்றுக்கொண்டு சென்று சோமதத்தன் ஒரு வியாபாரியிடம் அதற்க்கு பொருள் கேட்டான்.
தேவேந்திர உடையின் மகத்துவம் கண்ட வியாபாரி அந்த உடையின் மறு பாதியையும் கொண்டு வந்து கொடுத்தால் முன்னூறு தங்க காசுதருவதாக கூறினான்.

சோமதத்தன் மகாவீரரிடம் திரும்பி வந்து கேட்ட போது , மகாவீரர் தான் அணிந்திருந்த சிறு உடை மீதான பற்றையும் விட்டு விட்டார்.
அந்த ஆடையையும் கழற்றி கொடுத்து விட்டார். எந்த விதமான உடையுமே தீங்கு தான் பயக்கும் என்று அன்று முதல் திகம்பரரானார் மகாவீரர்.

கையில் திருவோடோ, ஏக தண்டமோ, திரிதண்டாமோ, எதுவும் அவர் வைத்திருக்கவில்லை.

அவர் உடல் முழுவதும் பூச்சிகள் ஊர்ந்தன, பூச்சிகள் அவர் உடலை கடித்தும் துன்புறுத்தின.
அவருடைய நிருவாண தோற்றம் கண்டு ஊராரும் அடித்து துன்புறுத்தினர். எல்லாவற்றையும் அவர் பொறுத்துக்கொண்டார்

நாட்கணக்கில் ,வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பசியும், பட்டினியுமாக இதே நிலை.

கண்ணையோ , உடம்பையோ தொட்டு சொறிந்தால் அதில் ஊரும் ஜீவன்கள் இறந்து விடுமோ என்று அஞ்சி பேசாமல் இருந்து விடுவார்.

சண்ட கௌசிகன் என்ற கொடிய நாகம் ஒரு நாள் வெகு தூரத்திலிருந்தே சீரும் சப்தம் கேட்டது. மகாவீரர் துளியும் அஞ்சாது நின்றார். கொடிய விஷம் பாய்ச்சி அது சினத்தோடு அவருடைய கட்டை விரலைக்கடித்தது.

'தம்பி சண்ட கௌசிகா!' 'உன் விஷம் என்னை ஒன்றும் செய்யாது. நான் சாக மாட்டேன். உன் காரியத்தால் தீவினை தான் பெருகும் .
உன் ஆத்மாவை கவனி . சக ஜீவா ராசிகளிடத்து அன்பு செய்' என்று அவர் கூறியதும் அந்த கொடிய விஷ நாகம், தலை கவிழ்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

Friday, January 15, 2010

பதினைந்து : இராமலிங்க அடிகளார்.


அடிகள் ஆவியோடியைந்த யாக்கையுடன் மறைந்த
அந்த புனித நேரம் 1874ஆம் ஆண்டு ஜனவரி30ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியாகும்.
மனித பிறவி எடுத்துவிட்ட எவரும் உடலோடு மறைவது சாத்தியமா?
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது தானே பெரியோர் வாக்கு.
அடிகளார் உடலோடு மறைந்தார் என்பது உண்மையாக இருக்க முடியுமா என்று பலரும் ஐயுற்றனர்.
உலக நியதிக்கு மாறாக பருவுடலோடு வள்ளலார் மறைந்து விட்டார்
என்ற செய்தியே
வள்ளலார் ஒரு சித்த புருஷர் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.
அவரது முடிவைப்பற்றிய உண்மையை உணர வெறும் அறிவு மட்டுமே போதாது.

"என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று பாடியவர் வள்ளலார்.
வள்ளலார் கூறும்போது சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியை தெரிவிப்பதே அன்றி வேறில்லை.
சாகின்றவன் சன்மார்க்க நிலையை பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி". என்று வலியுறுத்துகிறார்.

Saturday, January 9, 2010

பதினான்கு : எண்ணிலடங்கா மதங்கள்.


உலகில் இன்று நிலவி வரும் பதற்றங்களுக்கும்,
தீவிர வாதத்திற்கும் , இனப்படு கொலைகளுக்கும் ,
பொருளாதார சுரண்டல்களுக்கும் பின்னணியில் , காண கிடைக்காமல் ஒளிந்து கொண்டிருப்பது மத உணர்வுகளே!.

இது வரை மண்ணில் தோன்றி ஞானநிலை நிலை அடைந்த மகான்கள் அனைவருமே கண்டது ஒன்றை தான்.

அதுவே இறுதி நிலை சத்தியம். அதற்க்கு மேலுமோ, அப்பாலுமோ பிரிதொன்று இல்லை. இதை அனைவருமே கூறியுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்க, எண்ணிலடங்கா மதங்கள் தோன்ற காரணம் என்ன?

மூல சத்தியமான -பரபிரம்மம்-தூய இருப்புநிலை-இறைநிலை- இன்னபிற -இதை தவிர மற்ற அனைத்தும் மாயையே. ( மாயை: நிலையற்ற தோன்றி மறையக்கூடியது.) இதுவும் அனைத்து ஞானியரும் கூறியது தான்.

மதங்கள் அனைத்துமே இந்த மாயை எனும் நிழலால்தான் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த உண்மை நிலை ஞானமடைந்த ஞாநியர்களுக்கு தெரியாமலா போனது?

ஞாநியர்களுக்கு தெரிந்தே இருந்த்தது என்றால் ஏன் இந்த உண்மையை உலகுக்கு பிரகடனம் செய்யவில்லை?

அவர்களை தடுத்தது எது?

இன்னும் சில மதங்களில் கடவுள் எனும் மாய நிழலால் மதங்களை நிலை நிறுத்தி உள்ளனர்.
..........................மீண்டும் இது பற்றி பேசுவோம்.

Saturday, January 2, 2010

பதிமூன்று : வேடிக்கை 2

உனது வலது கரத்தை தூக்கி அதில் உள்ள பெரு விரலையோ , ஆட்காட்டி விரலையோ, நீட்டவோ, மடக்கவோ, சொடுக்கவோ முடிகிற மாதிரி--

உனது கண்களை மூடவோ,திறக்கவோ,உருட்டவோ, உன்னித்து பார்க்கவோ முடிகிற மாதிரி--

உனது நாவை மடிக்கவோ,புரட்டவோ, ருசி பார்க்கவோ முடிகிற மாதிரி--

உன்னை சுற்றி எவ்வளவோ சப்தங்கள் கேட்டாலும், ஏதோ ஒரு சப்தத்தை மட்டும் பிரித்து உணர்ந்து பார்க்கிற உனது காது மாதிரி--

உன் வீட்டு சாம்பாரில் மணப்பது அதில் உள்ள பச்சை மிளகாயா? கறிவேப்பிலையா? கடுகா? என பிரித்து பார்க்கும்
உனது மூக்கு மாதிரி--

உனது ஆறாவது புலன் ஆன-தூய இருப்பு நிலையை உணரும் -அறிவையும் சுலபமாக உணர முடியும்.

என்ன---
மேற்கண்ட ஐந்து புலன்களையும் அறிந்து அதை பழக்கி வைத்துள்ளோம்.
ஆறாவது புலனை அறியாமல் விட்டு வைத்திருக்கிறோம்.
இனியாவது

ஆறாவது புலனை சிறுக,சிறுக அறிய முயல்வோம்.

பன்னிரண்டு : வேடிக்கை 1

நீ இங்கு வந்திருக்கிறாய்!

உனது உடல் ஆரோக்கியம்

உன் சுற்றத்தில் நீ உருவாக்கி உள்ள உன் இமேஜ்

உன் மனைவி( அல்லது கணவன்)

உன் தாய்

உன் தகப்பன்

உன் குழந்தைகள்

உன் குடும்ப அமைப்பு

உன் பங்காளிகள்

உனது உறவினர்கள்

உனது ஜாதி--ஜாதிய அமைப்பு

உனது மதம்--மத அமைப்பு

உனது மொழி

உனது இனம்

நீ உறுப்பினராக உள்ள கட்சி

உனது நாடு

உனது தொழில்

நீ பாதுகாப்பாக நீடித்து உயிர் வாழ்வதற்கான -உன்னைப்போன்ற உனது முன்னோர்கள் கண்ட ஏற்பாடு- அதை திறம்பட
அமைத்துக்கொண்டு விட்டாய்.

உனக்கு அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கவலையில்லை.

இன்னும் ஒரு வருட உணவுக்கு பஞ்சமில்லை.

ஏன்--

உன் ஆயுளுக்கும் உணவு பஞ்சமே வராமல் ஏற்ப்பாடுகள் செய்து இருக்கிறாய்.

அது மட்டுமா?

உன் வாரிசுகளின் ஆயுத காலத்திற்கும் , அவர்களுக்கும் உணவு தட்டுப்பாடே ஏற்படாத வகையில் சொத்துக்களை
சேர்த்து இருக்கிறாய். ( உனது கனவிலும், கற்பனையிலும் உள்ள உனது வாரிசுகளுக்கும் கூட) .

ஆனால்

நீ

நீ

வந்த வேலையை மறந்து விட்டாய்.